Skip to content
Thamizh Padam

News

News2 min read

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

'Marco' Star Unni Mukundan Teams Up with Bollywood Producers!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) உடன் இணைந்து புதிய மலையாள திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை உன்னி முகுந்தன் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் முதன்முறையாக ஒரு திரைப்படத்திற்காக இணைகின்றன. பான் இந்திய அளவில் ரசிகர்களை சென்றடையும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனங்களின் நோக்கம்.

விமர்சன ரீதியாகவும் வர்த்த ரீதியாகவும் புகழ்பெற்ற பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பனோரமா ஸ்டுடியோஸ் திகழ்கிறது. ‘ஓம்காரா’, ‘ஸ்பெஷல் 26’, ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ரெய்டு’, ‘ஷைத்தான்’ மற்றும் பிளாக்பஸ்டர் ‘த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை பனோரமா ஸ்டுடியோஸ் தயாரி்த்துள்ளது. இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட முக்கிய விருதுகளையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. அபிஷேக் பதக் இயக்கிய ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அவர் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படத்தை இயக்கி, தயாரித்தும் வருகிறார். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பான் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘மார்கோ’ திரைப்படத்திற்குப் பிறகு, உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முக்கியமான பான் இந்திய நட்சத்திரங்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இதற்கிடையே, அவரது தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை தயாரித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. அந்தப் பயணத்தின் தொடக்கமாக அமைந்த ‘மேப்படியான்’ திரைப்படம் தேசிய விருது பெற்றது. இந்த பயணம் நடிகர், தயாரிப்பாளர் உன்னி முகுந்தன் திரைப்பயணத்தில் முக்கியமானது.

இதனையடுத்து, இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸுடன் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் இணைந்துள்ளது. மேலும், உன்னி முகுந்தனின் 50வது திரைப்படம் என்ற வகையிலும் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் முதன்முறையாக இயக்குநர் பொறுப்பையும் ஏற்கிறார். அதிரடியும் விறுவிறுப்பும் நிறைந்த கதைக்களத்துடன், பான் இந்திய அளவில் ரசிகர்களை சென்றடையும் நோக்கத்துடன் இந்தப் படம் உருவாகிறது.

இது குறித்து பனோரமா ஸ்டுடியோஸ் சேர்மன் குமார் மங்கத் பதக் பகிர்ந்து கொண்டதாவது, “உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் இந்த மலையாள திரைப்படத்திற்காக இணைவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உன்னி தன்னை ஒரு வலுவான பான் இந்திய நட்சத்திரமாக நிலைநிறுத்தியுள்ளார். குறிப்பாக, தனது 50வது திரைப்படத்தில் எழுத்து, இயக்கம் என்ற பொறுப்புகளை அவர் ஏற்றிருப்பது எங்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ரசிகர்களைப் போலவே, நாங்களும் இந்தத் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

பனோரமா ஸ்டுடியோஸ் நிர்வாக இயக்குநர் அபிஷேக் பதக் கூறியதாவது, “உன்னியின் சமீபகால திரைப்படங்களை கவனித்து வருகிறேன். அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களிலும் திரைப்படங்களிலும் அவர் வெளிப்படுத்தும் நம்பிக்கையும் தெளிவும் எப்போதும் என்னை கவர்ந்துள்ளன. ‘மேப்படியான்’ முதல் ‘மார்கோ’ வரை, வெவ்வேறு பாதைகளில் பயணிக்கவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளவும் அவர் தயாராக இருப்பதை நிரூபித்துள்ளார். இந்தத் திரைப்படம் குறித்து நாங்கள் பேசியபோது, நிச்சயம் இந்தப் படத்தை இணைந்து உருவாக்க வேண்டும் எனத் தோன்றியது. இப்போது அவரது ஐம்பதாவது திரைப்படத்தில், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக பொறுப்பேற்கிறார். நிச்சயம் திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும்” என்றார்.

இதுகுறித்து உன்னி முகுந்தன் பகிர்ந்து கொண்டதாவது, “எனது ஐம்பதாவது திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதை எழுதி, இயக்குவது எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்துள்ளது. எனது சொந்த கதைகளை சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துள்ளது. அதற்கான சரியான கதையும், சரியான தருணமும் இதுதான் என்று உணர்ந்தேன். குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இந்தத் திரைப்படம் பல்வேறு மொழிகள் பேசும் ரசிகர்களை நிச்சயம் சென்றடையும்” என்றார்.

இப்படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த விவரங்கள் விரைவில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp